மறைமலை அடிகள் சாலையில் உள்ளாட்சி துறை இயக்குனர் திடீர் ஆய்வு

புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2018-08-29 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை மறைமலை அடிகள் சாலையில் உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார். சாலையில் ஆக்கிரமிப்புகள் உள்ளனவா? குப்பைகள் தேக்கி வைக்கப்பட்டுள்ளனவா? என பார்வையிட்டார். அப்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்காலின் மேல் உள்ள சிலாப்புகள் உடைந்து இருந்ததை கண்டுபிடித்தார். அதனை உடனடியாக மாற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கடைகளுக்கு நகராட்சியின் உரிமம் உள்ளதா? எனவும் சரி பார்த்தார். இதில் உரிமம் பெறாத கடைகளின் விவரம் தெரியவந்தது. அந்த உரிமையாளர்களிடம், உடனடியாக உரிமம் பெற வேண்டும். இல்லை என்றால் நகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். கடைகளில் சேரும் குப்பைகளை ரோட்டில் வீசக்கூடாது. குப்பைத்தொட்டியில் தான் போட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மறைமலை அடிகள் சாலையில் சில பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. உடனே போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை தொடர்புகொண்டு அந்த வாகனங்களை முறைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். தொடர்ந்து ஆட்டுப்பட்டி பகுதிக்கு சென்று அங்கும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணனுடன் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சுதாகர், செயற்பொறியாளர் சேகரன், உதவி பொறியாளர் மலைவாசன், நகர சுகாதார அதிகாரி டாக்டர் கதிரேசன் மற்றும் அதிகாரிகளும் சென்று இருந்தனர்.

மேலும் செய்திகள்