பாகூர் பகுதிகளில் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்வதால் மாட்டுவண்டிகள் சிறைபிடிப்பு

பாகூர் பகுதிகளில் அதிக விலைக்கு மணல் விற்பனை செய்வதால் மாட்டு வண்டிகளை கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2018-08-29 23:00 GMT

பாகூர்,

பாகூர் அருகே ஓடும் தென்பெண்ணை ஆற்றின் ஒருபகுதியை தமிழக அரசும், மற்றொரு பகுதியை புதுவை அரசும் பயன்படுத்தி வருகின்றன. தமிழக அரசு சார்பில் நெல்லிக்குப்பம் அருகில் வான்பாக்கத்தில் மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணல் குவாரியில் புதுவை சேர்ந்த மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ளுவதற்கு அனுமதி கிடையாது. இதனால் தமிழக பகுதியை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் இங்கிருந்து மணல் எடுத்து வந்து புதுவையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார்கள். ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் வரை விலை வைத்து மணலை விற்பனை செய்கிறார்கள். அதிக விலைக்கு மணலை விற்பனை செய்வதை பாகூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசுக்கு சொந்தமான மணல் குவாரியில் இருந்து மணல் அள்ளி வரும் பெரும்பாலான மாட்டுவண்டிகள் பாகூர் விநாயகர் கோவில் வழியாக செல்கிறது. இதனால் இந்த பகுதிக்காவது குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய வேண்டும் என்று பாகூர் கிராம மக்கள் வலியுறுத்தினர். இதனை மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் பாகூர் விநாயகர் கோவில் வழியாக செல்வதையும் கடந்த சில நாட்களாக தவிர்த்து வந்தனர்.

இந்தநிலையில் பாகூர் வழியாக மீண்டும் மாட்டு வண்டிகள் வர ஆரம்பித்தன. இதை பார்த்த கிராம மக்கள் நேற்று 10–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளை சிறைபிடித்தனர். இதுபற்றி தகவல் அறிந்த பாகூர் போலீசார் அங்கு விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது தமிழக அரசுக்கு சொந்தமான மணல் குவாரி அருகில் உள்ள பாகூர் பகுதிக்காவது குறைந்த விலையில் மணல் விற்பனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை இரண்டாயிரம் வளாகம், அழகிய நத்தம் ஆகிய கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் மட்டும் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து சிறைபிடிக்கப்பட்ட மாட்டுவண்டிகளை விடுவித்தனர்.

மேலும் செய்திகள்