அம்மா சிமெண்டு விற்பனையில் மோசடி: சேலம் ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளர் பணி இடைநீக்கம்

அம்மா சிமெண்டு விற்பனையில் ரூ.5.91 லட்சம் மோசடி செய்து கைதான சேலம் ஊராட்சி ஒன்றிய இளநிலை உதவியாளரை பணி இடைநீக்கம் செய்து கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2018-08-29 23:15 GMT
சேலம்,

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர், சேலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். மேலும், அம்மா சிமெண்டு விற்பனை குடோன் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார். இவர் மீது 3,823 அம்மா சிமெண்டு மூட்டைகள் விற்பனை செய்ததில் ரூ.7 லட்சத்து 26 ஆயிரத்து 370-க்கு முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மோசடி நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து சுப்பிரமணி, ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 730 மட்டும் அரசிடம் திருப்பி செலுத்திவிட்டார். மீதித்தொகை ரூ.5 லட்சத்து 91 ஆயிரத்து 640-ஐ வங்கியில் செலுத்திவிட்டதாக போலியான வங்கி வரைவோலையை தயாரித்து மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தநிலையில், அம்மா சிமெண்டு மூட்டைகள் விற்பனை செய்து கையாடல் செய்த இளநிலை உதவியாளர் சுப்பிரமணி மீது நடவடிக்கை எடுக்குமாறு சேலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுந்தர்ராஜ், இரும்பாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்மா சிமெண்டு விற்பனையில் ரூ.5.91 லட்சம் கையாடல் செய்ததாக சுப்பிரமணியை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்குமாறு சேலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுந்தர்ராஜ் மூலம் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி நேற்று பணமோசடி புகாரில் சிக்கிய இளநிலை உதவியாளர் சுப்பிரமணியை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே சுப்பிரமணி பணிபுரிந்தபோது முறைகேடு புகாரில் சிக்கி 2 முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்