ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மேலும் 4 பேர் கைது

பர்கூரில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-29 23:00 GMT
பர்கூர்,

பர்கூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி அருகில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு அங்கிநாயனப்பள்ளியை சேர்ந்த சிதம்பரம் (வயது 27) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 24-ந் தேதி வங்கியில் இருந்த ஊழியர்கள் பணி முடிந்து சென்றனர். 25 மற்றும் 26-ந்தேதி வங்கிக்கு விடுமுறையாகும். 25-ந்தேதி இரவு ஏ.டி.எம். மையத்தில் காவலாளி சிதம்பரம் பணியில் இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர், தன்னை கட்டி போட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதாகவும், அவர்களின் கொள்ளை முயற்சி நிறைவேறாததால் தன்னை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு காரகுப்பம் ரோட்டில் உள்ள மேம்பாலம் அருகில் போட்டு விட்டு சென்றுவிட்டதாகவும் சிதம்பரம், வங்கி மேலாளரான வெங்கடேஷ் பிரபுவிடம் தெரிவித்தார். இதுகுறித்து வெங்கடேஷ் பிரபு பர்கூர் போலீசில் புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சீவிகுமார், நேரு, சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.

காவலாளி சிதம்பரத்திடம் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் காவலாளி சிதம்பரம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காவலாளி சிதம்பரத்தை போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து அவருடைய கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே 2 மோட்டார்சைக்கிள்களில் சந்தேகத்திற்கிடமாக வந்த 4 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ஏ.டி.எம். மைய கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிதம்பரம் நண்பர்கள் என தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரத்தின் நண்பர்களான திருப்பூரைச் சேர்ந்த விஜயகுமார் (28), வினோத்குமார் (25), பர்கூர் அருகே உள்ள அங்கிநாயனபள்ளியைச் சேர்ந்த கார்த்திக் (25), சேலம் பெருமாள் கோவில் மேட்டைச் சேர்ந்த சூர்யா (22) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து கியாஸ் வெல்டிங் கருவிகள், மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 4 பேரையும் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்