கலப்பட எண்ணெய் விற்பதாக புகார் எதிரொலி: விருத்தாசலம் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

விருத்தாசலம் பகுதியில் கலப்பட எண்ணெய் விற்பனை நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-08-29 23:00 GMT

விருத்தாசலம்,

விருத்தாசலம் பகுதியில் கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதன்அடிப்படையில் விருத்தாசலம் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று விருத்தாசலம் கடைவீதி, ஜங்சன்ரோடு, தென்கோட்டை வீதி ஆகிய பகுதிகளில் உள்ள மளிகைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய் தரமானதாக உள்ளதா? என ஆய்வு செய்த அதிகாரிகள், பாட்டில்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டாத எண்ணெய் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து விருத்தாசலம் கடைவீதியில் செக்கிழுத்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தயாரிக்கப்படும் எண்ணெய், தரமாக உற்பத்தி செய்யப்படுகிறதா? அல்லது அதில் ஏதேனும் கலப்படம் நடக்கிறதா? என ஆய்வு செய்தனர்.

இதையடுத்து அங்கு ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வைத்திருந்த எண்ணெய் மாதிரியை எடுத்து ஆய்வுக்காக கோயம்புத்தூர் பகுப்பாய்வு நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நிருபர்களிடம் உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் கூறுகையில், விருத்தாசலம் பகுதியில் பல இடங்களில் உள்ள செக்கிழுத்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்களில் ஆய்வு செய்தோம். அங்குள்ள எண்ணெய் மாதிரிகளை பகுப்பாய்விற்காக கோயம்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் அறிக்கையின் அடிப்படையில் யாரேனும் கலப்படம் கலந்த எண்ணெய் உற்பத்தி செய்யப்படுவது தெரியவந்தால், அதன் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்