காசிமேட்டில் மினி லாரி மோதி வாலிபர் பலி

காசிமேட்டில், மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-08-29 19:28 GMT
பெரம்பூர்,

சென்னை வண்ணாரப்பேட்டை மாடல் லைன் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் கோபி(வயது 25). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர், தனது நண்பர் நித்யானந்தம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ராயபுரத்தில் இருந்து திருவொற்றியூர் சென்றுவிட்டு மீண்டும் ராயபுரம் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

மினி லாரி மோதி பலி

காசிமேடு மீன்பிடி துறைமுகம் எதிரே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த மினி லாரியை முந்திச்செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியது.

இதில் நிலைதடுமாறி இருவரும் மோட்டார்சைக்கிளுடன் கீழே விழுந்தனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த கோபி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அவரது நண்பர் நித்யானந்தத்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய அதன் டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்