8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்
கோவையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை,
பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களுக்கு கடந்த ஜூலை மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி கோவை சாய்பாபா காலனியில் உள்ள தலைமை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முக சுந்தரம், மாநில உதவி செயலாளர் சுந்தரகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில செயலாளர் சி.ராஜேந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:–
தமிழகம் முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 430 பேருக்கு கடந்த ஜூலை மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கப்பட வில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்துக்குஆளாகி வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 7–ந் தேதி ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 20.5.2009 முதல் 30.5.2010 வரை உள்ள நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச போனஸ் தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்.
தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.எப். அமல்படுத்துவதில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். நிலுவையில் உள்ள ஊதிய தொகையை அபராதம் என்ற பெயரில் ஓப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் முகமது ஜாபர், ஒப்பந்த தொழிலாளர் சங்க மாநில உதவி தலைவர் சுந்தரக்கண்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.