கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி பணத்தை இழந்தவர்கள் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்

கோவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி நடைபெற்று உள்ளதாக போலீஸ் கமி‌ஷனரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.

Update: 2018-08-29 23:00 GMT

கோவை,

கோவை ஒண்டிப்புதூர் மற்றும் சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலர் கோவை நகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யாவை சந்தித்து புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

கோவை டவுன்ஹால், துடியலூர், லட்சுமி மில் சந்திப்பு, சரவணம்பட்டி, பூ மார்க்கெட் பகுதிகளில் தனியார் ஏலச்சீட்டு நிறுவனம் இயங்கி வந்தது. இதனை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த முரளிதரன் (வயது 56), அவருடைய மனைவி லதா (50) ஆகியோர் நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்த எங்களில் பலருக்கு முதிர்வு காலம் முடிந்தும் பணம் திருப்பி தரப்படவில்லை. நாங்கள் பணம் கேட்டு ஏலச்சீட்டு நிறுவனத்திற்கு சென்று முறையிட்டு வந்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தநிலையில், கடந்த மே மாதம் இந்த நிறுவனம் திடீரென்று மூடப்பட்டது. முரளிதரன், லதா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் 2 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுடைய பணத்தை மீட்டு தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், ஜோதிலட்சுமி உள்ளிட்டோர் கூறுகையில், ‘மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.10 ஆயிரம் வரை சீட்டு தொகை வசூலித்து வந்தனர். பல ஆண்டுகளாக இந்த சீட்டு நிறுவனம் இயங்கி வந்ததால் நம்பிக்கையின் அடிப்படையில் சீட்டு தொகையை செலுத்தி வந்தோம். 5 இடங்களில் உள்ள கிளைகளில் சுமார் 200 பேர் தலா 1 லட்சம் ரூபாய் முதல் 1½ லட்சம் ரூபாய் வரை சீட்டு தொகை செலுத்தியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு முதிர்வு தொகை வழங்கப்படவில்லை. சுமார் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்து இவர்கள் தலைமறைவாகி விட்டனர். இவர்களுக்கு சொந்தமாக வீடு மற்றும் வணிக கட்டிடம் உள்ளது. சொத்துக்களை போலீசார் கைப்பற்றும் முன் இந்த கட்டிடங்களை வேறு நபரின் பெயருக்கு மாற்றி எழுதி வைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. போலீசார் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்தனர்.

இந்த மோசடி குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்