கொடைக்கானல் மலையில் கொலை செய்யப்பட்டவரின் உடல் கண்டுபிடிப்பு: மீட்கும் பணி மீண்டும் இன்று நடக்கிறது

கொடைக்கானல் மலையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட கார் டிரைவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2018-08-29 22:45 GMT

கொடைக்கானல்,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 38). இவர், கடந்த 24–ந்தேதி இரவு 9 மணிக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வந்த புகாரின் பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடன் கடைசியாக செல்போனில் பேசிய நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேருடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்து உடலை கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் வீசியதாக அவர் கூறினார்.

இதையடுத்து கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணி தலைமையில் போலீசார் மற்றும் கொடைக்கானல் தீயணைப்பு படையினர் நேற்று உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். கொலை சம்பவத்தில் தொடர்புடைய அந்த நபரையும் போலீசார் உடன் அழைத்து வந்திருந்தனர். நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை உடலை தேடும் பணி நடந்தது. அப்போது அவருடைய உடல் சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் கிடப்பதை உறுதி செய்தனர். ஆனால் அவர்களால் அதனை கயிற்றின் மூலம் மேலே கொண்டு வரமுடியவில்லை. இதைத் தொடர்ந்து நாளை (இன்று) உடலை மீட்கும் பணியை மேற்கொள்ளப்படும் என்றும், இதற்காக மலைப்பகுதியில் இறங்கி உடலை மீட்கும் குழுவினரின் உதவியை நாடி இருப்பதாகவும், போலீசார் கூறினர்.

மேலும் செய்திகள்