லாரி மோதி விபத்து: மோட்டார்சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் சாவு

திருச்சுழி அருகே லாரி மோதி மோட்டார்சைக்கிளில் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள்.

Update: 2018-08-29 22:15 GMT

திருச்சுழி,

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள முத்துராமலிங்காபுரம்புதூரை சேர்ந்த உடையான் என்பவரது மகன் முருகன்(வயது24), கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த பெரியபாண்டி என்பவரது மகன் கணேசன்(28). இருவரும் காரியாபட்டி அருகேயுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தனர்.

நேற்று மாலை வேலை முடிந்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊருக்குத்திரும்பிக்கொண்டிருந்தனர். திருச்சுழி ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தபோது இவர்களது வாகனத்தின்மீது அந்தப்பக்கமாக வந்த லாரி மோதியது.

இதில் இருவருமே அதே இடத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள். தகவல் அறிந்த திருச்சுழி போலீசார் அங்கு சென்று இருவரது உடலையும் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மல்லாங்கிணறை சேர்ந்த லாரி டிரைவரான மற்றொரு கணேசனை கைது செய்தார்கள்.

வாலிபர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்ததை அறிந்ததும் கிராமங்களில் இருந்து அவர்களது உறவினர்கள் திருச்சுழி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அவர்கள் பிணவறை அருகே நின்றிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் அந்த அறையின் ‘சிலாப்’ இடிந்து விழுந்தது. இதில் அங்கு நின்றிருந்த 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்