தர்மபுரியில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் மீட்டனர் தீவிர விசாரணை

தரம்புரியில் மாயமான ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் மீட்டனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-08-28 22:15 GMT
தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் தம்மனம்பட்டியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 45). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். உதயகுமார் தர்மபுரி காந்தி நகரில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் உதயகுமார் வழக்கம்போல் வீட்டை விட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி செல்போனில் பேச முயன்றபோது ‘சுவிட்ச் ஆப்‘ செய்யப்பட்டிருந்தது. உதயகுமார் நண்பர்களின் வீடுகளுக்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை தர்மபுரி எஸ்.வி.ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே உதயகுமாரின் கார் கேட்பாரற்று நின்று கொண்டிருந்தது. அந்த காரில் உதயகுமார் அணிந்திருந்த சட்டையின் பட்டன்கள் அறுந்து விழுந்து கிடந்தன. இதனால் உதயகுமார் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக அவருடைய மனைவி சாந்தி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இரவு உதயகுமாரை போலீசார் மீட்டனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்