பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு: திருமுருகன்காந்திக்கு ஜாமீன் தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவு
பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருமுருகன்காந்திக்கு ஜாமீன் வழங்கி தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது.
தூத்துக்குடி,
பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருமுருகன்காந்திக்கு ஜாமீன் வழங்கி தூத்துக்குடி கோர்ட்டு உத்தரவிட்டது.
திருமுருகன்காந்தி மீது வழக்கு
தூத்துக்குடி அருகே உள்ள அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்த பொதுமக்களை கடந்த 4.3.2018 அன்று மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சந்தித்து பேசினார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீசார் அரசு உத்தரவை மீறி பொதுஅமைத்திக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு நேற்று தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராக வேலூர் சிறையில் இருந்து திருமுருகன்காந்தி நேற்று முன்தினம் நெல்லை பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் நேற்று காலையில் தூத்துக்குடி கோர்ட்டுக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.
ஜாமீன்
அவர் சரியாக காலை 11.40 மணிக்கு கோர்ட்டில் நீதிபதி தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, திருமுருகன்காந்திக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும், வழக்கு விசாரணையை வருகிற 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இருந்தபோதும், வேறு வழக்குகள் உள்ளதால் திருமுருகன்காந்தியை போலீசார் வேலூர் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.