புத்தன்தருவை-வைரவம்தருவை குளங்களில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு சண்முகநாதன் எம்.எல்.ஏ. தகவல்
புத்தன்தருவை, வைரவம்தருவை குளங்களில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று சண்முகநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
சாத்தான்குளம்,
புத்தன்தருவை, வைரவம்தருவை குளங்களில் தண்ணீர் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று சண்முகநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் முதல் தடுப்பணையான மருதூர் அணையின் மேலக்கால் மூலம் பாசன வசதி பெறும் பிரதான குளங்களான புத்தன்தருவை குளம், சடையநேரி குளங்களுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் செல்கிறது. மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரத்தில் இருந்து சடையநேரி கால்வாய் இரண்டாக பிரிகிறது.
அவற்றுள் ஒன்று சடையநேரி குளத்துக்கும், மற்றொன்று புத்தன்தருவை குளத்துக்கும் செல்கிறது.
மெஞ்ஞானபுரம் அருகே ராமசுப்பிரமணியபுரம் சடையநேரி கால்வாயில் தண்ணீர் செல்வதை சண்முகநாதன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர், குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில், கால்வாயில் உள்ள மண்மேடுகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அவர், சுப்பராயபுரம், பொத்தகாலன்விளை வழியாக புத்தன்தருவை குளத்துக்கு செல்லும் கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது புத்தன்தருவை குளத்துக்கு செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு விவசாயிகள் சண்முகநாதன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு வழங்கினர்.
குளங்களை நிரப்ப...
பின்னர் சண்முகநாதன் எம்.எல்.ஏ. கூறுகையில், சடையநேரி கால்வாய் வழியாக சடையநேரி குளம், புத்தன்தருவை குளம், வைரவம்தருவை குளத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் புத்தன்தருவை, வைரவம்தருவை குளங்களில் தண்ணீர் முழுவதும் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும். மணிமுத்தாறு 3-வது, 4-வது ரீச் வழியாக புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் சாத்தான்குளம் தாலுகாவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, உவர்ப்பு தன்மை நீங்கும் என்று கூறினார்.