மணப்பாறையில் குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மணப்பாறையில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-28 23:00 GMT
மணப்பாறை,

மணப்பாறை நகராட்சி வார்டு எண் 22–க்கு உட்பட்ட பூமாலைப்பட்டி பகுதியில் சுமார் 400–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அந்த பகுதியில் போதுமான தண்ணீர் வசதி இல்லை. காவிரி குடிநீர் கடந்த சில மாதங்களாக முறையாக வழங்கப்படாத நிலையில் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்படுவது இல்லை.

இதனால் வேதனை அடைந்த மக்கள் தண்ணீருக்காக அங்கும், இங்குமாக அலைய வேண்டிய நிலை இருந்து வந்தது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இதனால் தற்போது தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதி உள்ளான பொதுமக்கள் நேற்று காலை மணப்பாறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்க வேண்டும், ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் தொட்டியில் நீர் விரப்பி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை நகராட்சி ஆணையர் சுதா மற்றும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக லாரி மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதுடன் ஆழ்குழாய் கிணறு மற்றும் காவிரி குடிநீர் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்