லாரி மீது சரக்கு ஆட்டோ மோதல்: சாவு எண்ணிக்கை 3–ஆக உயர்வு

லாரி மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் சாவு எண்ணிக்கை 3–ஆக உயர்ந்துள்ளது.

Update: 2018-08-28 22:45 GMT
அன்னவாசல்,

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 54). அதேபகுதியை சேர்ந்தவர்கள் செந்தாமரைகண்ணன் (31), சுப்பிரமணியன் (31). இவர்கள் 3 பேரும் ஒரு சரக்கு ஆட்டோவில், மண்ணச்சநல்லூரில் இருந்து அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு சென்று கொண்டிருந்தனர்.

மோகன் சரக்கு ஆட்டோவை ஓட்டினார். செந்தாமரைகண்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் அருகில் அமர்ந்து இருந்தனர். புதுக்கோட்டை அருகே கரப்பட்டி என்னும் இடத்தில் சென்று கொண்டிருந்த போது, சரக்கு ஆட்டோவின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் நிலைதடுமாறிய சரக்கு ஆட்டோ, எதிரே காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் மோகன், செந்தாமரைகண்ணன், சுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.


சரக்கு ஆட்டோவில் இருந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் சாலையில் விழுந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம் வடவாளம் பகுதியை சேர்ந்த சேகர் (54) தப்பியோடினார். அப்போது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால், சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மோகன் உள்பட 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.இதில் மோகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தநிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 3–ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்