அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்தது
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின் போது குழந்தை இறந்து பிறந்தது. இதனால் உறவினர்கள் திடீர் போராட்டம் செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விருத்தாசலம்,
பெண்ணாடம் அருகே உள்ள தாளநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணியன் மகன் குமார்(வயது 31). விவசாயி. இவருடைய மனைவி வெண்ணிலா(26). திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இந்த நிலையில் வெண்ணிலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வெண்ணிலாவை அவரது குடும்பத்தினர் அழைத்து வந்து, சேர்த்தனர். மதியம் 2.45 மணிக்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தையானது இறந்த நிலையிலேயே பிறந்துள்ளது. இதுபற்றி, இவரது குடும்பத்தினரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், திடீரென டாக்டர்களை கண்டித்து, மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் உடலுடன் அவரது குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் அமர்ந்து கதறி அழுதனர்.
இதற்கிடையே போராட்டம் பற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வெண்ணிலாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், வெண்ணிலாவை பிரசவத்திற்காக நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனையில் சேர்த்தோம். அதன் பின்னர் டாக்டர்கள் அவரை ஒரே ஒரு முறை மட்டுமே வந்து பார்த்து சென்றார்கள். உரிய முறையில் மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. இதன் காரணமாக தான் குழந்தை இறந்தநிலையில் பிறந்து இருக்கிறது. எனவே இதற்கு காரணமான டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையேற்று அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.