‘மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம் என்பதை மனதில் கொண்டு பணியாற்றுங்கள்’
‘மக்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம் என்பதை மனதில் கொண்டு பணியாற்றுங்கள்’ என்று போலீசாருக்கு, ஓய்வு பெற்ற நீதிபதி அறிவுரை கூறினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசாருக்கு சட்டம் குறித்த பயிற்சி முகாம் நேற்று விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். வக்கீல் ஏழுமலை முன்னிலை வகித்தார். முகாமை ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சின்னப்பன் தொடங்கி வைத்து, வழக்குகளை பதிவு செய்யும் முறைகள், ஆவணங்களை மிகவும் பாதுகாப்பாக கோர்ட்டுகளுக்கு கொண்டு செல்லும் வழிமுறைகள், ஆன்-லைன் மூலம் வரும் புகார்களை உடனுக்குடன் பிழையின்றி பதிவு செய்வது சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது:-
மகளிர் போலீஸ் நிலையங்களில் குடும்ப பிரச்சினை சம்பந்தமாக வரும் வழக்குகளை பெரும்பாலும் பதிவு செய்யாமல் அவர்களை கவுன்சிலிங்கிற்கு அனுப்புகின்றனர். இது தவறான செயலாகும். அதேபோல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு புகார் கொடுப்போரை விசாரணை செய்யும் அதிகாரம் இல்லை.
இங்குள்ள பல இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசாருக்கு சட்டம் சம்பந்தமான பிரிவுகளை எப்படி பயன்படுத்துவது என்பது கூட தெரியவில்லை. போலீசார், முதலில் முதல் தகவல் அறிக்கையை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இல்லையெனில் பாதி வழக்குகள் பதிவு செய்வதிலேயே தவறும் ஏற்படும். இனி வரும் காலங்களில் கூட இதுபோன்று யாரும் செய்யாதீர்கள். தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள். அரசு பணிகளில் இருப்பவர்கள் மரியாதையை பெரும்பாலும் எதிர்பார்க்க கூடாது. நாம் மக்களுக்கு சேவை செய்யத்தான் வந்துள்ளோம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பணி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சங்கர், வீமராஜ், இளங்கோவன், மகேஷ், திருமால், சரவணன், கோமதி உள்பட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.