எண்ணூரில் பள்ளி மாணவன் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் தந்தை கைது
எண்ணூரில் பள்ளி மாணவன் காரை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்திய வழக்கில் அவனது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூரை அடுத்த எண்ணூர் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ்ராஜ். இவரது மகன் ஆகாஷ் (வயது 14). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் தனது தந்தையின் காரை எடுத்துக்கொண்டு தன்னுடன் படிக்கும் சக மாணவர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் (15), சொர்ணராஜ்(15), ரூபோ(14), ரிஸ்வான் (15) ஆகாஷ் (15) ஆகியோரை அதில் ஏற்றிக்கொண்டு நேதாஜி நகரில் இருந்து எண்ணூர் நோக்கி சென்றார்.
தந்தை கைது
காரை ஆகாஷ் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் சென்றபோது தறிகெட்டு ஓடிய கார் அருகில் இருந்த செங்கல், மணல், விற்கும் கடைக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த கார் மீண்டும் சாலைக்கு வந்து சினிமாவில் வருவதுபோல் வட்டமடித்து நின்றது.
இதில் காரில் தூக்கி வீசப்பட்ட மாணவன் தமிழ் செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டிய ஆகாசும் பலத்த காயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து மாதவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஓட்டுனர் உரிமம் ஆவணம் இல்லாத சிறுவன் ஆகாசுக்கு, கார் ஓட்ட கொடுத்த அவரது தந்தை அலெக்ஸ்ராஜை போலீசார் கைது செய்தனர்.