6 நாட்களாக நடந்த ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம்: உடற்தகுதி தேர்வில் 2,846 பேர் தகுதி
சேலத்தில் கடந்த 6 நாட்களாக நடந்த ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் உடற்தகுதி தேர்வில் 2,846 பேர் தகுதி பெற்றனர். அவர்களுக்கு இன்று முதல் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.
சேலம்,
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. முதற்கட்டமாக சோல்ஜர் ஜெனரல் டியூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மேன், சோல்ஜர் கிளர்க் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
இந்த முகாமில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, மதுரை மற்றும் தேனி ஆகிய 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வருகிறார்கள். நேற்று சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் டெக்னிக்கல் அம்யூனிசன், ஏவியேசன் ஆகிய பணிகளுக்கு உடற்தகுதி தேர்வு நடந்தது.
இதில் விண்ணப்பித்திருந்த சேலம், கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் தேனி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உயரம் மற்றும் மார்பு அளவீடுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடந்தது.
உடற்தகுதி தேர்வு குறித்து அதிகாரிகள் கூறும் போது, ‘கடந்த 6 நாட்களாக நடந்த ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாமில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் 2,846 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் அடுத்தகட்டமாக மருத்துவ பரிசோதனைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தகுதி பெறுபவர்கள் விரைவில் கோவையில் நடைபெறும் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்‘ என்றனர்.