அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை பேட்டையில் அரசு பஸ் மீது கல் வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பேட்டை,
நெல்லை பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் நேற்று இறந்து விட்டார். இதையொட்டி அந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரிக்கு வந்திருந்த மாணவ-மாணவிகள் பேட்டை ரெயில்வே கேட் அருகில் பஸ்சுக்காக காத்திருந்தனர்.அப்போது சேரன்மாதேவியில் இருந்து நெல்லை சந்திப்பு நோக்கி அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ்சில் சில மாணவ-மாணவிகள் ஏறினர். பஸ் புறப்பட்ட போது சிலர் அந்த பஸ்சை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதையடுத்து அந்த பஸ் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதில் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ்சில் இருந்த பயணிகளை வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பஸ் டிரைவர் தாழையூத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் மீது கல் வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.