அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: 10 ஆயிரம் கையெழுத்துடன் விவசாய சங்கத்தினர் மனு

அழகர் அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆயிரம் கையெழுத்துடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2018-08-27 23:00 GMT
விருதுநகர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் விஜயமுருகன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

விவசாயிகள் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்வதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு விவசாய விஞ்ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும். பயிர் காப்பீட்டுத்திட்டத்தினை அரசே ஏற்று நடத்திட வேண்டும். பயிர்சாகுபடிக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்கிடவும், வறட்சி பாதிப்பு ஏற்பட்டால் நிபந்தனை இன்றி கடன்களை தள்ளுபடி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

இலவச மின்சார இணைப்பு கேட்டு நீண்ட நாட்களாக காத்திருக்கும் பம்புசெட் விவசாயிகளுக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும். காவிரி-வைகை, குண்டாறு-வைப்பாறு இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கிட வேண்டும். விளை பொருட்களை கொள்முதல் செய்யாமல் உற்பத்தியில் வீழ்ச்சி என்று விவசாயிகளுக்கு பலவிதமாக நெருக்கடி கொடுப்பது தவிர்க்கப்பட வேண்டும். அச்சன்கோவில்-பம்பையாறு இணைந்த அழகர்அணை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதனைதொடர்ந்து அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (செப்டம்பர்) 5-ந்தேதி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெற உள்ள ஊர்வலத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளையும் கலந்து கொள்ளும் என தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்