மணல் கொள்ளையை தடுக்காமல் அணைகளை பாதுகாக்க முடியாது பி.ஆர்.பாண்டியன் பேட்டி

மணல் கொள்ளையை தடுக்காமல், அணைகளை பாதுகாக்க முடியாது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2018-08-27 23:00 GMT
சுந்தரக்கோட்டை,

முக்கொம்பு கொள்ளிடம் மேலணை உடைந்ததற்கான உண்மை காரணத்தை மூடிமறைக்க முயற்சிப்பதால் மற்ற அணைகளுக்கும் பேராபத்து ஏற்பட்டு உள்ளது. மணல் கொள்ளையால் தான் அணை இடிந்தது. மணல் கொள்ளையை தடுக்காமல், அணைகளை பாதுகாக்க முடியாது. உடைந்த அணையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பாசனத்துக்கு தண்ணீரை பகிர்ந்து வழங்குவதற்கு சிரமம் ஏற்படும். இதனால் கல்லணைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். பெல் நிறுவனம் அல்லது ராணுவம் மூலம் இரும்பு தூண்களை கொண்டு தற்காலிக கதவணைகள் அமைப்பது மட்டுமே பயனுள்ளதாக அமையும்.

மத்திய அரசின் அணைகள், ஆறுகள் தூய்மைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 2016-17-ம் ஆண்டில் ஒதுக்கீடு செய்த தொகையில் ரூ.850 கோடியை தமிழக அரசு செலவழித்ததாக கூறுகிறார்கள். இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக பாசன பகுதிகளில் உள்ள அனைத்து அணைகளின் உறுதி தன்மை குறித்தும், அணைகள் பராமரிப்பு பணி குறித்தும் ஆய்வு செய்ய ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர். 

மேலும் செய்திகள்