தனி சலுகையுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பழங்குடி மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்படும் - மத்திய மந்திரி சுதர்சன் பகத்
தனி சலுகையுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி பழங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய மந்திரி சுதர்சன் பகத் கூறினார்.
துடியலூர்,
தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் ஆய்வு மையமும், கொங்குநாடு கல்லூரி ஆராய்ச்சி இயக்குனர் ஆறுசாமி ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து “பழங்குடி மக்களின் பண்பாடும், நலனும்” என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நேற்று நடத்தியது.
இதற்கு கல்லூரி செயலாளர் வாசுகி தலைமை தாங்கினார். கருத்தரங்கில் ஆய்வு கோப்புகளை மக்கள் சேவை மையத்தின் நிறுவனர் வானதி சினிவாசன் பெற்றுக்கொண்டார். மத்திய பழங்குடி துறை மந்திரி சுதர்சன் பகத் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
நாட்டின் கலாசாரத்துக்கும், பாரம்பரியத்துக்கும் பழங்குடி மக்கள் மிகுந்த அக்கறை கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த மண்ணையும், வனத்தையும் வழிபாடு செய்து சிறப்பு செய்கின்றவர்கள் இவர்கள்தான். இந்த மண்ணில்தான் நமக்கு அனைத்து செல்வங்களும், வளங்களும் கிடைக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் 8 சதவீதம் ஆதிவாசி பழங்குடி மக்கள் இருக்கிறார்கள். ஆதிவாசி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு வகையான பயிற்சிகள் அளித்து புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது பழங்குடியினருக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்பட்டு அவர்களின் நலனில் தனி கவனம் செலுத்தி வந்தார். அதுபோல் தற்போது மத்திய அரசு அவர்களுக்கு தனி சலுகையுடன் வேலைவாய்ப்புகள் உருவாக்கி வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது. அவர்களின் கல்வி, பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மத்திய மந்திரி சுதர்சன் பகத், வழிகாட்டி கையேட்டை வெளியிட்டார். இதனை கல்லூரி செயலாளர் வாசுகி பெற்றுக்கொண்டார். கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியும், தமிழக அரசின் பழங்குடியினர் ஆய்வு மையத்துக்கு இடையே புத்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. முடிவில் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் நன்றி கூறினார்.
இதன்பின்னர், கோவை புலியகுளம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவி விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி கலந்துகொண்டார். தூய்மை பாரத திட்டம் தொடர்பாக மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 50 மாணவிகளுக்கு மத்திய மந்திரி சுதர்சன் பகத் பரிசுகளை வழங்கி பாராட்டினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரி செந்திவேல் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.