தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் கன்வேயர் பெல்ட்டை தாங்கி நிற்கும் கோபுரம் உடைந்ததால் பரபரப்பு
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் கன்வேயர் பெல்ட்டை தாங்கி நிற்கும் கோபுரம் உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் இயங்கி வருகின்றன. இந்த அனல்மின்நிலையத்துக்கு தேவையான நிலக்கரி கப்பல் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு கொண்டு வரப்படுகிறது.
அங்கு உள்ள கரித்தளத்தில் இருந்து அனல்மின்நிலையத்துக்கு நிலக்கரியை கொண்டு செல்வதற்காக துறைமுகம் முதல் அனல்மின்நிலையம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கன்வேயர் பெல்ட் அமைக்கப்பட்டு உள்ளது. கன்வேயர் பெல்ட் சுமார் 30 அடி உயரத்தில் அனல்மின்நிலையத்துக்குள் வருகிறது. இந்த கன்வேயர் பெல்ட்டை தாங்குவதற்காக வரிசையாக இரும்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இதில் அனல்மின்நிலையம் உள்பகுதியில் உள்ள ஒரு கோபுரம் நேற்று எதிர்பாராதவிதமாக உடைந்து கீழே விழுந்தது. இதில் அந்த பகுதியில் இருந்த தண்ணீர் குழாய் உடைந்தது. உடனடியாக அனல்மின்நிலைய அதிகாரிகள் மற்றொரு கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி கொண்டு செல்லும் பணியை மேற்கொண்டனர். இதனால் அனல்மின்நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் பணி, மின்சார உற்பத்தி எதுவும் பாதிக்கப்படவில்லை.
இதற்கிடையே, அதிகாரிகள் பழுதடைந்த இரும்பு கோபுரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.