நாற்று நட்டு பூ வியாபாரிகள் போராட்டம்: தண்ணீரில் மீன் பிடித்தனர்
மதுரையில் பூ வியாபாரிகள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
மதுரையில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாலையில் மழை பெய்து நகரை குளிர வைக்கிறது. மழை பெய்தவுடன் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்பட்டு உள்ளது. இதில் மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டின் நிலையோ சொல்லி மாளாது. மதுரையில் பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்களை விற்க விவசாயிகளும், பூ வியாபாரிகளும் நூற்றுக்கணக்கில் தினமும் காலையும், மாலையும் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சிறிய அளவிலான மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் அப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியும், சகதி நிறைந்தும் காணப்படுகிறது.
இதுகுறித்து பூ மார்க்கெட்டை சேர்ந்த வியாபாரிகள் பல முறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று ஒன்று திரண்ட பூ வியாபாரிகளும், விவசாயிகளும் அங்கு தேங்கிய தண்ணீரில் மீன் பிடித்தும், பெண்கள் அங்கு இருந்த சகதியில் நாற்று நட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.