தாளவாடியில் காட்டுப்பன்றி தாக்கியதில் தொழிலாளி சாவு

தாளவாடியில் காட்டுப்பன்றி தாக்கியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-08-27 22:15 GMT

தாளவாடி.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பூஜேகவுடர் வீதியை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 30). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி லாவண்யா என்ற மனைவியும் அமிர்தா என்ற மகளும் உள்ளார்கள்.

சித்தராஜ் நேற்று காலை 6.30 மணி அளவில் ஊரை ஒட்டியுள்ள ஒதுக்குப்புறமான பகுதியில் இயற்கை உபாதையை கழித்து கொண்டிருந்தார். அப்போது புதர் மறைவில் இருந்து ஒரு காட்டுப்பன்றி திடீரென்று அங்கு வந்தது. பின்னர் சித்தராஜை தூக்கி வீசியது. இதில் கீழே விழுந்த அவருக்கு இடது தொடை மற்றும் மர்ம உறுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

வலி தாங்க முடியாமல் அவர் ‘‘அய்யோ, அம்மா’’ என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் காட்டுப்பன்றி அங்கிருந்து ஓடிவிட்டது. அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே சித்தராஜை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி சித்தராஜ் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து அவருடைய மனைவி குழந்தை மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தாளவாடி வனச்சரகர் சிவக்குமார் சித்தராஜின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்கினார்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, ‘வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டுப்பன்றிகள் ஊருக்குள்ளே சுற்றி திரிகிறது. இரவு நேரங்களில் தோட்டங்களில் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருகிறது. தற்போது மனிதரையும் தாக்கியுள்ளது. எனவே காட்டுப்பன்றிகள் ஊருக்குள் புகாதவாறு அதை கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறைக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்