ஏரி, வாய்க்கால்களை தூர்வார அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு

பிள்ளையார்குப்பம் மற்றும் காலாப்பட்டு பகுதிகளுக்கு சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்தினார். அப்போது, பருவமழை தொடங்குவதற்குள் ஏரிகளையும், வாய்க்கால்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2018-08-27 00:28 GMT
வில்லியனூர்,

புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வார இறுதி நாட்களில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி நேற்று காலை 6 மணி அளவில் பொதுப்பணித்துறை, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் வில்லியனூரை அடுத்த பிள்ளையார்குப்பத்துக்கு கவர்னர் கிரண்பெடி அரசு பஸ்சில் சென்றார்.

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட படுகை அணையை அவர் ஆய்வு செய்தார். அப்போது, ‘இந்த பகுதிக்கு 6 மாதங்களுக்கு முன்பு நான் ஏற்கனவே ஆய்வு நடத்த வந்துள்ளேன். அப்போது படுகை அணையில் சில இடங்களில் இருந்த பழுதை சுட்டிக்காட்டி சீரமைக்க உத்தரவிட்டிருந்தேன். அதன்படி அணையை சீரமைக்க ரூ.16 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதற்கான கோப்பு என்னிடம் உள்ளது. அதன்பேரில் தற்போது இந்த படுகை அணையை பார்வையிட வந்துள்ளேன். விரைவில் சீரமைப்பு பணிக்கு ஒப்புதல் அளிக்கப்படும்’ என்றார்.

பின்னர் ஆறு, ஏரி மற்றும் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பருவமழை தொடங்குவதற்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கவர்னர் கிரண்பெடி காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். அங்கு பல்கலைக்கழக தலைமை நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற அவர் அங்கு மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் பல்கலைக்கழகத்தில் ஒரு நாளுக்கு எவ்வளவு நீர் பயன்படுத்தப்படுகிறது, எவ்வளவு நீர் என்னென்ன வழிகளில் சேமிக்கப்படுகிறது என்பது குறித்து விவரங்களை கேட்டறிந்தார். குடிநீர் மற்றும் கழிவு நீர் மேலாண்மை குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அது தொடர்பாக முழுமையான அறிக்கை தர அதிகாரிகளுக்கு கிரண்பெடி உத்தரவிட்டார்.

பல்கலைக்கழக ஆய்வின்போது துணைவேந்தர் குர்மீத்சிங், பேராசிரியர்கள் பல்கலைக்கழக அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்