ஆம்பூர் அருகே கிராம உதவியாளரை தாக்கிவிட்டு தப்பிய மணல் கடத்தல் லாரி உரிமையாளர்

கிராம உதவியாளரை தாக்கிவிட்டு மணல் கடத்தல் டிப்பர் லாரியுடன் தப்பிய உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-27 00:07 GMT
ஆம்பூர்,

ஆம்பூர் அருகே உள்ள சோலூர் பாலாற்று பகுதியில் மாட்டு வண்டி மூலம் மணல் கடத்தி, அதனை ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சேகரித்து, இரவு நேரத்தில் டிப்பர் லாரிகள் மூலம் மணல் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆம்பூர் தாசில்தார் சுஜாதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தாசில்தார் நேற்று முன்தினம் நள்ளிரவில் அரசு வாகனத்தில் செல்லாமல் ஆட்டோவில் அப்பகுதிக்கு சென்றார். அப்போது ஆட்டோ தான் வருகிறது என நினைத்த மணல் கடத்தல் கும்பல் டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். இதனால் மணல் கடத்தல் சம்பவத்தை உறுதிப்படுத்தி கொண்ட தாசில்தார் ஆட்டோவை விட்டு கீழே இறங்கி சென்றார். தாசில்தார் வருவதை அறிந்த மணல் ஏற்றியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆனால் டிப்பர் லாரியின் உரிமையாளரும், டிரைவருமான ஆம்பூர் சான்றோர்குப்பத்தை சேர்ந்த வினோத்குமார் (வயது 26) என்பவர் மட்டும் சிக்கிக் கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவரிடம் டிப்பர் லாரியை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும் என கூறி, கிராம உதவியாளர் கார்த்தீஸ்வரன் என்பவரை அவருடன் அனுப்பி வைத்துவிட்டு, அங்கிருந்து ஆட்டோவில் டிப்பர் லாரியை தாசில்தார் பின் தொடர்ந்து சென்றார். ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் டிப்பர் லாரி வந்தபோது, வினோத்குமார் திடீரென லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதனால் கிராம உதவியாளரும் கீழே இறங்க, அவரை சரமாரியாக தாக்கிவிட்டு, வினோத்குமார் டிப்பர் லாரியுடன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் டிப்பர் லாரியுடன் தப்பிச் சென்ற வினோத்குமாரை தேடி வந்தனர். இதற்கிடையே வினோத்குமார் விண்ணமங்கலம் ஊராட்சி காட்டுக்கொல்லை பகுதியில் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டு, தப்பி ஓடியது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

பின்னர் போலீசார் தப்பி ஓடிய வினோத்குமாரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்