தமிழகத்தில் பொதுப்பணித்துறை செயல் இழந்துவிட்டது

தமிழகத்தில் பொதுப்பணித்துறை செயல் இழந்துவிட்டது என்று நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-26 22:00 GMT
நெல்லை, 

பாளையங்கோட்டையில் கருணாநிதிக்கு நடந்தபுகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக மழை இல்லாமல் வறட்சி நிலவியது. இந்த ஆண்டு நல்ல மழை பெய்து தண்ணீர் அதிகம் வந்தும், சேமிக்கமுடியாத நிலை உள்ளது. அந்த அளவிற்கு இந்த அரசு அணைகளை முறையாக பராமரிக்காமலும், தூர்வாராமாலும் இருந்துவிட்டது. இதனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது தமிழகத்தில் பொதுப்பணித்துறை செயல் இழந்துவிட்டது என்பது தெளிவாகிறது. இன்னும் பல இடங்களில் குளங்கள், அணைகளில் ஷட்டர்கள் சரியாக சீர்செய்யப்படாமல் உள்ளது. இந்த ஷட்டர்களை உடனே சீரமைக்கவேண்டும்.

இந்த ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. பழிவாங்கப்படுகிறார்கள் எனவே நேர்மையான அதிகாரிகளை ஊக்குவிக்கவேண்டும். இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவேண்டும். மணல் கொள்ளையை உடனடியாக அரசு கட்டுப்படுத்தவேண்டும். மோடியின் செல்வாக்கு குறைந்து வருவதால் பாராளுமன்றத்திற்கு தேர்தலை முன்கூட்டியே நடத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. வருகிற தேர்தலில் வகுப்பு வாதசக்திகளை முறியடிக்கும் வகையில் எங்கள் கூட்டணி அமையும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்