விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட மாணவர் சாவு: பொதுமக்கள் ரெயில் மறியல் போராட்டம்

விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பொதுமக்கள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-08-26 23:06 GMT
பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 22). பொன்னேரியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் குற்ற வழக்கு ஒன்றுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

நேற்று முன்தினம் மாலையில் மவுலீஸ்வரன் கும்மிடிப்பூண்டி - எளாவூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் மவுலீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்த சின்னகாவனம் பொதுமக்கள் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று கல்லூரி மாணவர் மவுலீஸ்வரனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே அந்த வழியாக வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழித்தடத்தில் ஒரு மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் ரெயில்வே போலீசார் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள், கல்லூரி மாணவர் மவுலீஸ்வரன் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் பொன்னேரி போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக கும்மிடிப்பூண்டி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கத்குமார், போலீஸ்காரர் வினய்குமார் ஆகியோரை ரெயில்வே நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனிடையே பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சதீஷ்குமார் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று மவுலீஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் வரை உடன் இருந்தார். பின்னர் மவுலீஸ்வரன் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்