சென்னை பெசன்ட்நகர் கடலில் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு

சென்னை பெசன்ட்நகர் கடலில் வாஜ்பாய் அஸ்தி நேற்று கரைக்கப்பட்டது.

Update: 2018-08-26 22:44 GMT
சென்னை,

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி கடந்த 22-ந் தேதி தமிழகம் கொண்டுவரப்பட்டது. சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, கன்னியாகுமரி, திருச்சி, ராமேசுவரம், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய 6 இடங்களில் கரைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை பெசன்ட்நகர் அஷ்டலட்சுமி கோவில் அருகே உள்ள கடற்கரைக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வாஜ்பாய் அஸ்தி கலசம் நேற்று கொண்டு வரப்பட்டது. இதற்காக கடற்கரையில் பந்தல் போடப்பட்டு, வாஜ்பாய் புகைப்படம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் வைதீக முறைப்படி பூஜை செய்யப்பட்டு அஸ்தி கரைப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது. தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் மீனவரணி தலைவர் சதீஷ், சென்னை மாநகர பொறுப்பாளர் சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர் ஜெய்சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் 3 படகுகளில் சென்றனர்.

இதனையடுத்து வாஜ்பாய் அஸ்தி கடலில் கரைக்கப்பட்டது. பின்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்துக்கு எங்கள் கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா வருவது தொடர்பான பயண திட்டம் இதுவரை வகுக்கப்படவில்லை. அதிகாரபூர்வ தகவல் இன்னும் எங்களுக்கு வரவில்லை. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் மேலோங்கி இருக்கிறது.

மரணம் அடைந்த மூத்த தலைவர்களுக்கு கட்சி பாகுபாடு இன்றி அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்துகிறார்கள். எனவே அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்