மொபட்டில் சென்ற வக்கீல் மனைவியை கீழே தள்ளி 6 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

மொபட்டில் சென்ற வக்கீல் மனைவியை கீழே தள்ளி விட்டு 6 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-08-26 22:15 GMT
ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள கே.ராசியமங்கலத்தை சேர்ந்தவர் மிரண்டா. வக்கீல். இவரது மனைவி ஜாய்ஸ் (வயது35). இவர் நேற்று மாலை தனது மாமியார் அருட்செல்வியை தனது மொபட்டில் அழைத்துக்கொண்டு, ஆலங்குடிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள், ஜாய்ஸ், அருட்செல்வி சென்று கொண்டிருந்த மொபட்டை மறித்தனர். பின்னர் ஜாய்ஸ் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதை ஜாய்ஸ் தடுக்கவே, அவரை மர்மநபர்கள் கீழே தள்ளிவிட்டனர். பின்னர் ஜாய்ஸ் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றனர்.

மொபட்டில் இருந்து விழுந்த ஜாய்ஸ் படுகாயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாலி சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் முத்துசெல்வம். இவரது மனைவி ராணி (41). ராயப்பட்டியை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மனைவி கலா (42). இவர்கள் 2 பேரும் சொந்த வேலை நிமித்தமாக புத்தாம்பூருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது மொபட்டின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், ராணியின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் சுதாரித்து கொண்ட ராணி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனால் பயந்துபோன, மர்மநபர்கள் ராணி மற்றும் கலாவை கீழே தள்ளி விட்டு, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் மொபட்டில் இருந்து தவறி விழுந்த ராணி, கலா ஆகிய 2 பேரும் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்