கலைநிகழ்ச்சியை தடுத்த போலீசை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டம்
சிறுபாக்கத்தில் கோவில் திருவிழாவில் கலை நிகழ்ச்சியை நடத்த விடாமல் தடுத்த போலீசை கண்டித்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் தெற்கு பகுதியில் உள்ளது முனீஸ்வரர் கோவில். இந்த கோவில் திருவிழா கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கலைநிகழ்ச்சி ஒன்றை அந்த பகுதி மக்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். இதற்கு சென்னை ஐகோர்ட்டை அணுகி, உரிய அனுமதியையும் பெற்று இருந்தனர்.
இந்த சூழ்நிலையில், இரவு கலை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. அப்போது அங்கு வந்த சிறுபாக்கம் போலீசார், திருவிழாவில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு, அனுமதி இல்லை என்று கூறி, தடை விதித்தனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனால் ஆவேசமடைந்த மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிறுபாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்தனர். அங்கு நுழைவு வாயில் முன்பு அமர்ந்து திடீரன தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கலைநிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதிபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு , இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியஜான்சி, சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிசெல்வன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இருப்பினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டம் செய்த அவர்கள், பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இருப்பினும் கோவில் திருவிழாவில் கலைநிகழ்ச்சி நடைபெறவில்லை.