திருப்பூரில் சங்கிலி பறிப்பு ஆசாமிகள் 2 பேர் கைது: 30 பவுன் நகை பறிமுதல்

திருப்பூர் மாநகரில் சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 30 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

Update: 2018-08-26 23:15 GMT

திருப்பூர்,

திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி(வயது 48). இவர் ஜெய்பாவாய் மாநகராட்சி பள்ளியில் ஓவிய ஆசிரியை ஆவார். சம்பவத்தன்று மாலை இவர் குத்தூஸ்புரம் அருகே ஸ்கூட்டரில் சென்றபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வளர்மதியிடம் இருந்து 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினார்கள்.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சங்கிலி பறிப்பு ஆசாமிகளை போலீசார் தேடி வந்தனர். திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் மனோகரன் உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் உமா மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் பாபு தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் நேற்று திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையில் வாகன தணிக்கையின் போது 2 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த ரமேஷ்(44), நல்லூரை சேர்ந்த பார்த்தீபன்(40) என்பதும், இவர்கள் தான், ஆசிரியை வளர்மதியிடம் சங்கிலியை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் சேர்ந்து திருப்பூர் ஊரகம், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் தலா 2 சங்கிலி பறிப்பு வழக்குகளிலும் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 30 பவுன் நகை மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ரமேஷ், பார்த்தீபன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்