வேப்பூர் அருகே விபத்து லாரி மீது கார் மோதல்; ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

Update: 2018-08-26 23:00 GMT
வேப்பூர்,

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள கண்டியூரை சேர்ந்தவர் அப்பு(வயது 92). இவருடைய மகன் கண்ணன்(66). இவரது மனைவி ஸ்ரீஷா(56). இவர்களுக்கு காமாட்சி(19) என்கிற மகள் உள்ளார். இந்த நிலையில் கண்ணன் தனது குடும்பத்தினருடன் ஒரு காரில் திருத்தணி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர். காரை அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்(40) என்பவர் ஓட்டி சென்றார்.

கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பின்னர், நேற்று முன்தினம் இரவு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது நேற்று அதிகாலை 3 மணிக்கு கார் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரியநாச்சி என்கிற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, முன்னால் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சுப்பிரமணியனின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கி உருக்குலைந்து போனது.

காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய அப்பு, கண்ணன், ஸ்ரீஷா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காமாட்சி, சுப்பிரமணியன் ஆகியோர் படுகாயமடைந்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காயமடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் உயிரிழந்த 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி, அந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்று திரும்பிய போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்