ஜெயலலிதா பெயரில் நடக்கிற போலி ஆட்சியை அகற்ற வேண்டும்

தி.மு.க.வுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்துள்ளார் என்றும், ஜெயலலிதா பெயரில் நடக்கிற போலி ஆட்சியை அகற்ற வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2018-08-26 21:45 GMT
ஒட்டன்சத்திரம்,


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கட்சியும், ஆட்சியும் தற்போது நம்மிடம் இல்லை. இரட்டை இலை சின்னம் அவர்களிடம் இருந்து, அது தோல்வி சின்னமாக மாறிவிட்டது. அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் எங்கள் பின்னால் தான் இருக்கிறார்கள். பிற கட்சியினர் கூட்டம் நடத்தினால் அதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்கிறது.
ஆனால், அ.ம.மு.க. கூட்டத்துக்கு மட்டும் அனுமதி அளிக்க பயப்படுகிறது. நாங்கள் கூட்டம் நடத்த நீதிமன்றத்தை அணுகி தான் அனுமதியை பெறுகிறோம். ஆளுங்கட்சியும், பிரதான எதிர்க்கட்சியும் அ.ம.மு.க.வை பார்த்து நடுங்குகின்றன.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னை குட்டி எதிரி என்று கூறுகிறார். நான் ஜெயலலிதாவின் குட்டி. அவர், 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி அல்ல. 16 ஆயிரம் அடி பாய்வேன். நாங்கள் யார் என்பதை தமிழகம் மட்டும் அல்ல, இந்திய துணைக்கண்டமே அறிந்து கொண்டுள்ளது. ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் தான் இறந்தார் என்பது விசாரணை ஆணையத்தின் மூலம் தெரியவந்து கொண்டு இருக்கிறது.

கருணாநிதி மரணத்துக்கு பிறகு, அவருக்கு மெரினாவில் இடம் வேண்டும் என்று முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு தான் அவர்களுக்கிடையே பெரிய சதித்திட்டம் இருப்பது தெரியவருகிறது. தி.மு.க.வுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இருக்கிறதோ? இல்லையோ? எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி இருக்கிறது.

ஒட்டன்சத்திரம்-அவினாசி சாலை அமைக்க ரூ.1,600 கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினருக்கு தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலை அமைக்க ரூ.713 கோடியே 45 லட்சம் தான் செலவாகும் என்று கூறப்படுகிறது. இதேபோல் பல ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சரின் உறவினர் களுக்கே ஒதுக்கப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

நான், இரட்டை இலையை உங்களுக்கு வாங்கி கொடுப்பதற்காக தான் திகார் சிறைக்கு போனேன். இப்போது நடப்பது ஊழல் ஆட்சி. இது விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். இந்த ஆட்சி, ஜெயலலிதாவின் ஆட்சி அல்ல. அவருடைய பெயரில் நடக்கும் போலி ஆட்சி. இதனை அகற்ற வேண்டும். தனிப்பட்ட காரணத்துக்காக இந்த ஆட்சியை நான் கவிழ்க்க நினைக்கவில்லை.

தமிழகத்தில் நல்லாட்சி மலர வேண்டும் என்று தான் நான் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறேன். நான் முதல்வராக நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டே ஆகி இருப்பேன். ஆனால் எனக்கு பதவி மீது ஆசை கிடையாது.
ஜெயலலிதா மீது போடப்பட்ட 46 வழக்குகளிலும் அவர் நிரபராதி என நிரூபித்தார். அவர் இறந்த பிறகு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் வந்த தீர்ப்பால், அனைத்து பழிகளையும் தானே ஏற்றுக்கொண்டு சசிகலா சிறைக்கு சென்றார். அவருடைய தியாகத்தை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும்தான் எங்கள் பின்னால் இருக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மாபெரும் வெற்றியை பெறும். வருகிற 31-ந்தேதி, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக் கில் நல்ல தீர்ப்பு வரும். மணல் கொள்ளையால் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் எதுவாக இருந்தாலும் அதில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்