திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் முற்றுகை போராட்டத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பு

குடிமராமத்து பணியில் ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் முற்றுகை போராட்டத்தில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2018-08-26 22:30 GMT
சுந்தரக்கோட்டை,

மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் அனைத்து நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய நிர்வாககுழு உறுப்பினர் முனியாண்டி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 2 லட்சம் கன அடி தண்ணீர் கடலில் கலக்கிறது. ஆனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்திலும் இதுவரை நிரம்பாததால் நீர்மட்டம் குறைந்துள்ளது, இதனால் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

பெருக்கெடுத்து ஆறுகளில் செல்லும் தண்ணீர் கிளை ஆறுகளிலும், வாய்க்கால்களிலும், கண்மாய்களிலும் செல்லாததால், சம்பா சாகுபடி நேரடி விதைப்பு மூலம் பயிர் செய்துள்ள விவசாயிகளின் வயல்கள் காய்ந்து வருகிறது. மேலும் தமிழக அரசு குடிமராமத்து பணிகளை செய்வதற்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் முறையாக தூர்வாராமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதால் நீர் வழித்தடங்களில் தண்ணீர் செல்லாமல் உள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியும் சாகுபடி செய்ய முடியாத அவல நிலைக்கு விவசாயிகளை தமிழக அரசு தள்ளியுள்ளது.

இப்பாதிப்பிற்கு காரணமான தமிழக அரசையும், பொதுப்பணித்துறையையும் கண்டித்து நாளை (செவ்வாய்க்கிழமை) இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மன்னார்குடி பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய, நகர குழுவின் சார்பில் 2 ஆயிரம் பேர் பங்கேற்பது என்று முடிவு செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாதர் சங்க மாநில துணை தலைவர் மாலாபாண்டியன், கட்சியின் நகர செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் துரை.அருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் மகேந்திரன், இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாப்பையன், மாணவர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்