தமிழகத்தில் அனைத்து அணைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் அனைத்து அணைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

Update: 2018-08-26 22:45 GMT
சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பஸ் நிலையம் எதிரே பிளாஸ்டிக் இல்லா தமிழகம் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அமைச்சர் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி, உதவி கலெக்டர் (பொறுப்பு) இருதயராஜ், நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பொன்வாசுகிராமன், மன்னார்குடி நகர வங்கி தலைவர் குமார், முன்னாள் நகரசபை தலைவர் சுதாஅன்புச்செல்வன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்செல்வன் மற்றும் அரசு அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பின்னா அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு தமிழக மக்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உடைந்த முக்கொம்பு பாலத்தினை நேரில் பார்வையிட்டு, அதற்கான விளக்கத்தை தந்துள்ளார். அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அணை கட்டுவதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 100 ஆண்டுகள் தாண்டிய காரணத்தாலும், அணையில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் தேங்கியதால் பாலம் உடைந்தது. இதனால் அப்பகுதிகளில் விவசாயத்திற்கு எந்த பாதிப்பும் கிடையாது.

தமிழகத்தில் அனைத்து அணைகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்