விபத்து கற்றுக்கொடுத்த வாகன சுற்றுப்பயணம்

சிங்கா ஜோகி சத்யாவேணி, வளர்ந்து வரும் இளம் டென்னிஸ் வீராங்கனையாக பிரகாசித்து கொண்டிருந்தவர்.

Update: 2018-08-26 10:09 GMT
சிங்கா ஜோகி சத்யாவேணி, வளர்ந்து வரும் இளம் டென்னிஸ் வீராங்கனையாக பிரகாசித்து கொண்டிருந்தவர். தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்ற சமயத்தில் விபத்து ரூபத்தில் விதி விளையாடிவிட்டது. கடும் காயங்களால் அவதிப்பட்டு, பல அறுவைசிகிச்சைகள் செய்து கொண்டவர் டென்னிஸ் விளையாடும் தகுதியை இழந்துவிட்டார். இருப்பினும் அவர் துவண்டுவிடவில்லை. விபத்து ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள்வதற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டி பழகிவிட்டார். அதனால் இவரது வாழ்க்கை பைக் மற்றும் பைக் பயணங்களோடு கழிகிறது. இவர் தன்னுடைய புல்லட் வாகனத்தில் நாட்டின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். மேலும் தன்னுடைய மோட்டார் வண்டிகளை புதுப்புது முறைகளில் அழகுபடுத்தி வருகிறார். இவரது முயற்சி வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

பைக்கின் பெட்ரோல் டேங்கில் 3டி தொழில்நுட்பத்திலான சித்திரங்கள் வரைந்தும் வாகன ஓட்டி களின் கவனத்தை ஈர்த்துகொண்டிருக்கிறார். அவருடைய மோட்டார் சைக்கிளில் இடம்பெற்றிருக்கும் வடிவங்களை பார்த்து பலரும் அதுபோல் பெயிண்டிங் செய்து தருமாறு சத்யாவேணியை அணுகு கிறார்கள். மோட்டார் சைக்கிள் கிளப் ஒன்றையும் நிர்வகித்து பெண்களுக்கு வாகனம் ஓட்ட கற்றுக்கொடுத்தும் வருகிறார். விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் வாகனங்கள் பக்கம் நெருங்கவே ஆரம்பத்தில் பயப்பட்டிருக்கிறார். அவருடைய தாயார்தான் மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்து ஊக்கப் படுத்தியிருக்கிறார். ஐதராபாத்தை சேர்ந்தவரான சத்யா வேணி 2008-ம் ஆண்டு விபத்தில் சிக்கியிருக்கிறார். பூரண குணமடைய 2013-ம் ஆண்டு வரை பல்வேறு கட்ட அறுவைசிகிச்சைகள் செய்திருக்கிறார்.

‘‘விபத்து என் வாழ்க்கையையே முடக்கி போட்டது. மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன். டென்னிஸ் விளையாடுவதை தவிர வேறு எதை பற்றியும் என்னால் சிந்தித்து பார்க்க முடியவில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல விரும்பாமல் இருந்தேன். ஒருநாள் வீட்டின் வாசலில் இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. என் அம்மா என்னிடம் சாவியை கொடுத்து அதை ஓட்டுவதற்கு பழகுமாறு கட்டாயப் படுத்தினார். என் கால்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதை பற்றி அவர் கவலைப்படவில்லை. சாலை பயணத்தில் ஏற்படும் பயத்தை போக்குவதற்கு நீ கட்டாயம் இருசக்கர வாகனத்தில் சவாரி செய்தாக வேண்டும் என்றார். அவருடைய விருப்பத்திற்காக உறவுப்பெண் ஒருவர் மூலம் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினேன். சில மாதங்கள் கழித்து ஓரளவு ஓட்டுவதற்கு பழகிவிட்டேன். தனியாக நகர்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றேன். அந்த சமயத்தில் பெண்கள் யாரும் புல்லட் ஓட்டி நான் பார்க்கவில்லை. பெண் ஒருவர் புல்லட் ஓட்டுவது நிறைய ஆண்களுக்கு பிடிக்கவில்லை. என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள். என்னை பின் தொடர்ந்து வந்து பய முறுத்தும் வகையில் வாகனம் ஓட்டி தொந்தரவு செய்தார்கள். ஒருகட்டத்தில் நான் பொறுமை இழந்து கடுமையான வார்த்தைகளை உச்சரிக்க தொடங்கினேன். அதன் பிறகே அமைதியானார்கள். பின்னர் புல்லட்டில் வெளி இடங்களுக்கு செல்வது எனக்கு பிடித்து போனது. வெறுமனே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பெண்மணியாக இருக்க நான் விரும்பவில்லை. என் மோட்டார் சைக்கிளை வண்ணமயமாக்கி அழகு பார்ப்பது எனக்கு பிடித்தமான பொழுதுபோக்காக மாறியது. சிறுவயதிலேயே ஓவியங்கள் வரைந்து பழகியதால் 2டி, 3டி நுட்பங்களை பயன்படுத்தி பெட்ரோல் டேங்க் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் டிசைன்களை உருவாக்கினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் பயணம் செய்யும் பகுதிகளில் என் மோட்டார் சைக்கிளை பார்ப்பவர்கள் அதுபோல் தங்கள் மோட்டார் சைக்கிளையும் அழகுபடுத்த ஆசைப்படுகிறார்கள்’’ என்கிறார்.

மேலும் செய்திகள்