சமையல் அறை சுகாதாரம்.. ஆரோக்கியத்திற்கு உத்தரவாதம்..

உங்கள் ஆரோக்கியம் மருத்துவமனையால் அல்ல, உங்கள் சமையல் அறையால்தான் பாதுகாக்கவும், தீர்மானிக்கவும்படுகிறது.

Update: 2018-08-26 07:17 GMT
ங்கள் ஆரோக்கியம் மருத்துவமனையால் அல்ல, உங்கள் சமையல் அறையால்தான் பாதுகாக்கவும், தீர்மானிக்கவும்படுகிறது. அதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றால், உங்கள் சமையல் அறை சுத்தமாக இருக்கவேண்டும். அதிலும் நீங்கள் அடிக்கடி வயிற்றுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறவராக இருந்தால், அதற்கு நிச்சயமாக உங்கள் சமையல் அறை சுகாதாரக்குறைவும் ஒரு காரணமாக இருக்கும். உணவு விஷத்தன்மையால் உருவாகும் புட் பாய்சன், அலர்ஜி, வயிற்றுக்கோளாறு, நோய்த் தொற்று, எலிக்காய்ச்சல் போன்ற பல்வேறு பாதிப்புகள் சமையல் அறை சுத்தமின்மையால்தான் ஏற்படுகின்றன.

சமையல் அறையையும், சமையல் அறை பொருட்களையும் சுத்தமாக வைக்கவேண்டிய விதம் பற்றி பார்ப்போம்!

பழங்கள் மற்றும் காய்கறிகளை பெரும்பாலும் கழுவித்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டும் போதாது. அவற்றை நறுக்க பயன்படுத்தும் கத்தியும் தூய்மையாக இருக்க வேண்டும். நறுக்கிய பழங்களை பரிமாறும் பாத்திரங்களையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டியது அவசியம். பச்சை காய்கறிகளை நறுக்கும்போது அதில் இருக்கும் நுண்கிருமிகள் கத்தியிலும், அரிவாள் மனையிலும் படிந்துவிடும். அதை கழுவாமல் அப்படியே வைத்திருந்தால் அவை பெருகிக்கொண்டே இருக்கும். அதே கத்தியை கழுவாமல் பயன்படுத்தும்போது அந்த நுண்கிருமிகள் புதிதாக வெட்டும் பொருளில் பதிந்து விடும். அவைகளை சாப்பிடும்போது, வயிற்றுக்குள் சென்று பல்வேறு விதமான நோய்களை உருவாக்கும்.

சமையலறை ‘சிலாப்பை’ அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டியது அவசியம். சுத்தமான துணியால் துடைத்து அழுக்கை போக்க வேண்டும். ‘ஸ்டவ்’ அடுப்பை சுற்றியுள்ள பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம். சிலாப் போன்ற சுகாதாரமற்ற பகுதியில்வைத்து எந்த பொருளையும் நறுக்கக்கூடாது. அவ்வாறு நறுக்கி உட்கொள்ளப்படும் உணவுப் பொருட்களால் நோய்த்தன்மை உருவாகக்கூடும்.

பாத்திரங்களை துலக்கும் சோப்புகள், பாத்திரங்களில் ஒட்டியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சோப்பு சிறிதளவேணும் ஓரங்களில் ஒட்டியிருந்தால் நாம் சமைக்கும் உணவோடு கலந்து விடும். அதனால் பலவிதமான ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு, வயிற்றிற்குள் சென்று ‘புட் பாய்சன்’ ஆகிவிடும்.

பாத்திரங்களை கொட்டிவைத்து கழுவும் ‘சிங்க்’கை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம். அதை சுத்தமாக்கிய பின்பே அதில் பாத்திரங்களை வைத்து கழுவ வேண்டும். பிசுபிசுப்பு படிந்த பாத்திரங்களை அதிக நேரம் வைத்திருக்காமல் உடனே கழுவி துடைத்திடவேண்டும். உணவுப் பொருட்களை பாத்திரங்களில் பல மணி நேரம் வைத்திருந்தால் அதில் சிலவகை பாக்டீரியாக்கள் உருவாகும். அது நேரம் அதிகமாகும்போது பன்படங்கு பெருகும். இதனால் பல வித வயிற்று உபாதைகள் உருவாகும்.

பெரும்பாலான வீடுகளில் எல்லா நேரமும் ‘சிங்க்’கில் தண்ணீர் தேங்கிக்கிடக்கும். அவ்வாறு தண்ணீர் தேங்கக்கூடாது. அவ்வப்போது சிங்க்கை கழுவி, உலரச் செய்யவேண்டும். அதனை கழுவுவதற்கென்று ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் கடைகளில் உள்ளன. அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். துலக்கிய பாத்திரங்களில் இருக்கும் நீரை வடித்து, சில மணி நேரம் வெயிலில் காயவைத்த பின்பே பயன்படுத்த வேண்டும். வெயில் நல்ல கிருமி நாசினி. சமையலறைகளில் ஜன்னல்களை திறந்து வைத்து சூரியன் உள்ளே படும்படி இருக்க வேண்டும். அப்போதுதான் நோய்க்கிருமிகள் அழியும்.

கெட்டுப் போன காய்கறிகள், பழங்கள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அவற்றை குப்பையில் போட்டு விடவேண்டும். ரொட்டி, வெல்லம், பழ வகைகளின் மேற்புறத்தில் வெள்ளை படிந்த பூசனம் பரவி இருந்தால் அந்த பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டு மீதமுள்ளதை சாப்பிடுவது நல்ல பழக்கம் இல்லை. இந்த பூசனம் என்பது ஒரு பொருள் மீது படர்ந்து விட்டால் அந்த பொருளின் உட்பகுதியிலும் பரவியிருக்கும் என்பதை உணருங்கள்.

பழைய மாவு, ரவை போன்றவற்றில் வண்டு, கிருமிகள் தோன்றி விட்டால் அதை சலித்து காயவைத்து மறுபடியும் பயன்படுத்தாதீர்கள். ஒரு கிருமி வெளியேறும் போது பல முட்டைகளை வைத்து விட்டுத்தான் போகும். அவை கண்ணுக்குத் தெரியாத கிருமிகள். சலித்தாலும் நீங்காது. ஆரோக்கிய வாழ்வின் ரகசியமே சுத்தமான கிச்சனில் இருந்து தான் தொடங்குகிறது. இதை தெரிந்து கொண்டால் நோய்களை நிரந்தரமாக உங்களிடம் இருந்து அகற்றலாம்.

மேலும் செய்திகள்