அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு

சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.

Update: 2018-08-25 22:52 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்று நடுதல் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். கள்ளர் சீரமைப்பு பள்ளி முன்னாள் மாணவர்கள் அறக் கட்டளை தலைவர் அன்பு கிறிஸ்டியான், முன்னாள் எம்.எல்.ஏ. பிரேம்குமார், முன்னாள் மாநகராட்சி மேயர் மருதராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொண்டமநாயக்கன்பட்டி கள்ளர் பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு கேடயங்களை அமைச்சர் வழங்கி பேசினார். அப்போது, ‘தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி ஒழுக்கத்தையும் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். அரசு பள்ளிகள், விடுதிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகள் உடனடியாக செய்து தரப்படும். அரசு நலத்திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி நன்றாக படித்து உயர்ந்த பதவிகளுக்கு வர வேண்டும்’ என்றார்.

முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நட்டார். விழாவில், எஸ்.பி.எம். பொறியியல் கல்லூரி தாளாளர் ஜெயராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி, திண்டுக்கல் மாணவர் விடுதி காப்பாளர் காசிராஜன் உள்பட பல்வேறு கள்ளர் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்