பூச்சி மருந்து கலந்த கரைசலை குடித்த 14 ஆடுகள் சாவு போலீசார் விசாரணை

பொம்மிடி அருகே பூச்சி மருந்து கலந்த கரைசலை குடித்த 14 ஆடுகள் இறந்தன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2018-08-25 22:30 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள அஜ்ஜம்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம். மில் தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். இவர் 20 வெள்ளாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் அங்குள்ள மலைப்பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றார். பின்னர் மாலை ஆடுகளை மீண்டும் வீட்டுக்கு ஓட்டி வந்தார்.

அப்போது 14 ஆடுகள் அதேபகுதியை சேர்ந்த கொள்ளு மாது என்பவருடைய தோட்டத்திற்குள் சென்றது. பின்னர் அங்கேயே 14 ஆடுகளும் ஒவ்வொன்றாக மயங்கி விழுந்து இறந்தது. இதை கண்டு பழனியம்மாள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர். அப்போது கொள்ளு மாது தோட்டத்தில் சாமந்தி பூக்கள் செடிகளுக்கு அடிக்க பாத்திரத்தில் பூச்சி மருந்து கலந்து வைத்து இருப்பதும், அந்த கரைசலை மேய்ச்சலுக்கு சென்று விட்டு வந்த பழனியம்மாளின் ஆடுகள் குடித்ததால் இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து பழனியம்மாள் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று பொம்மிடி கால்நடை டாக்டர் ரவி மூலம் இறந்த 14 ஆடுகளின் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டன. பாத்திரத்தில் இருந்த கரைசலை டாக்டர் ஆய்வுக்காக எடுத்து சென்றார். பின்னர் அந்த ஆடுகள் அங்கேயே குழிதோண்டி புதைக்கப்பட்டன.

இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடுகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்