ஆபத்தான வீடுகளில் வசிக்கும் கொரவயல் ஆதிவாசி மக்கள்: அடிப்படை வசதிகள் செய்து தர அரசுக்கு கோரிக்கை

ஆபத்தான வீடுகளில் வசித்து வரும் கொரவயல் ஆதிவாசி மக்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2018-08-25 22:15 GMT

கூடலூர்,

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்டது கொரவயல் ஆதிவாசி கிராமம். இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 34 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதில் சில வீடுகளின் மேற்கூரைகள் கான்கிரீட் கொண்டும், மீதமுள்ள வீடுகளின் மேற்கூரை சிமெண்டு சீட் கொண்டும் அமைக்கப்பட்டது. ஆனால் தரமின்றி கட்டப்பட்ட அந்த வீடுகள், நாளடைவில் பழுதடைந்து விட்டன. தற்போது அனைத்து வீடுகளும் இடியும் நிலையில் காணப்படுகிறது. மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் வழிந்தோடுகிறது. இதனால் ஆதிவாசி மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–

நாங்கள் குடியிருந்து வரும் வீடுகள் இடியும் நிலையில் உள்ளது. சுவர்களிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தில் கழிப்பறை வசதி இல்லை. திறந்தவெளியில் மலம், ஜலம் கழிக்கும் நிலை காணப்படுகிறது. கடந்த ஆண்டு அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.15 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த இடத்திலும் முறையாக கழிவு தேக்க தொட்டி கட்டப்படவில்லை. இதனால் மக்கள் அதனை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் தெருவிளக்கு வசதி இல்லை. நடைபாதைகள் தரமின்றி போடப்பட்டதால், அனைத்து இடங்களிலும் சேதமடைந்து கிடக்கிறது. எனவே எங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு முன்வர வேண்டும். மேலும் ஆபத்தான வீடுகளை இடித்துவிட்டு, புதிதாக தரமான வீடுகள் கட்டி தர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்