கருணாநிதியின் கனவுகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் - தெலுங்கு நடிகர் மோகன்பாபு
கருணாநிதியின் கனவுகளை, மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று தெலுங்கு நடிகர் மோகன்பாபு கூறினார்.
கோவை,
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தி.மு.க. சார்பில் புகழஞ்சலி கூட்டம் கோவை இந்துஸ்தான் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.தி.மு.க.செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில், ‘மறக்கமுடியுமா கலைஞரை’ என்ற தலைப்பில் நடிகர், நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்கள்.
முன்னதாக கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
டைரக்டர் பாரதிராஜா, நடிகர்கள் சிவக்குமார், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், ராதாரவி, பிரபு, ராஜேஷ், நாசர், மயில்சாமி, நடிகை ராதிகா, தெலுங்கு நடிகர் மோகன்பாபு ஆகியோர் கலந்துகொண்டு கருணாநிதி கலைத்துறை மற்றும் பொதுவாழ்வில் ஆற்றிய அரும்பணிகள் குறித்து பேசினார்கள்.
தெலுங்கு நடிகர் மோகன்பாபு பேசும்போது கூறியதாவது:–
நான் பிறந்தது ஆந்திரமாநிலம் சித்தோடு பகுதி என்றாலும், சென்னையில்தான் சிறுவயது முதல் பள்ளிப்படிப்பையும், கலையுலக பயணத்தையும் தொடங்கினேன். தமிழ்த்தாயின் மடியில் வளர்ந்துதான் இந்த அளவுக்கு வளர்ந்தேன். கலைஞர் கருணாநிதியை எனது வாழ்வில் 4 முறை நான் நேரில் சந்தித்து உள்ளேன். கருணாநிதி தமிழர்களுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த பொக்கிஷம்.
அவர் திரையுலகில் ஆற்றிய பணியை மறக்க முடியுமா? யாராலும் அழிக்கத்தான் முடியுமா?. பராசக்தி, மனோகரா, மந்திரகுமாரி, மலைக்கள்ளன் என்று பல படங்களில் அவர் எழுதிய அனல்தெரிக்கும் வசனங்களை பார்த்து அசந்து போய் இருக்கிறேன். அவரது கதைவசனத்தில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.
மு.கருணாநிதி என்றால், மு-முன்னுதாரணம், க–கருணை, ரு–ருத்ரம், ணா–நாத்திகம், நி–நிதானம், தி–திராவிடம் ஆகும். அண்ணாவுக்கு பின்னர் 50 ஆண்டுகாலம் தி.மு.க.வை தாங்கி பிடித்தவர் கருணாநிதி. மறைந்த அண்ணாவின் இதயத்தில் இடம்பெற்றவர்.
அண்ணாவும், கருணாநிதியும் சமூகநீதிக்காக பாடுபட்டார்கள். அதனால்தான் மெரினாவில் சமாதியிலும் அருகருகே ஒன்றிணைந்து இருக்கிறார்கள். உப்பையும், கடலையும் எப்படி பிரிக்க முடியாதோ, அதுபோல் அண்ணாவையும், கருணாநிதியையும் பிரிக்க முடியாது.
கருணாநிதியின் கனவை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார். அவர் முதல்–அமைச்சர் ஆகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் ராதாரவி பேசும்போது கூறியதாவது:–
கலைஞர் என்றால் அது கந்தகசொல். யார் போனாலும் மீண்டும் அவரிடம் திரும்பி வந்து விடுவார்கள். என்னையும் சேர்த்துதான் கூறுகிறேன். கலைஞர் என்ற பட்டத்தை என்னுடைய தந்தை எம்.ஆர். ராதா வழங்கினார். ‘முதல்–அமைச்சர் என்ற பதவி தோளில் கிடக்கும் துண்டு. அது கீழே விழுந்தாலும் கவலைப்பட மாட்டேன். கலைஞர் என்ற பெயர் இடுப்பில் கட்டி இருக்கும் வேட்டி அது அவிழ்ந்து விடாமல் பார்த்துக்கொள்வேன்’ என்று கருணாநிதி கூறினார். சினிமா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என்று அவரிடம் கோரிக்கைவிடுத்தேன். அதனை அவர் நிறைவேற்றி தந்தார். சமூக நீதிக்காக பாடுபட்ட அரும்பெரும் தலைவர். அரவாணிகளுக்கு திருநங்கை என்ற பெயரையும், உடல் ஊனமுற்றவர்களுக்கு மாற்றுத்திறனாளி என்ற பெயரையும் அவர் அளித்தார்.
வீடு கட்டும்போது சவுக்குமரம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். கட்டி முடித்து கிரகப்பிரவேசம் நடக்கும்போது சவுக்குகட்டைகளை தூர ஒதுக்கி, வாழை மரத்தை கட்டி வைத்து விழா எடுப்பார்கள். சவுக்கு கட்டையாக இந்த இயக்கத்துக்கும், தமிழ் மக்களுக்கும் உழைத்து வருபவர் தளபதி ஸ்டாலின். இந்த இயக்கத்தை பிடிக்காதவர்கள் இங்கிருந்து விலகிச்சென்றுவிட வேண்டும். நாட்டை காப்பாற்ற தி.மு.க. இருக்க வேண்டும். தி.மு.க.வை காப்பாற்ற தளபதி இருக்க வேண்டும். கலைஞரின் கனவை அவர் நிறைவேற்றுவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் ராஜேஷ் பேசும்போது கூறியதாவது:–
குருவை மிஞ்சாத சிஷ்யன் கருணாநிதி. தந்தை பெரியார் 94 ஆண்டுகள் 68 நாட்கள் வாழ்ந்தார். கருணாநி 94 ஆண்டுகள் 65 நாட்கள் வாழ்ந்தார். கருணாநிதி ஒரு சாதனை சரித்திரம், வாழ்ந்தபோதும் புகழுடன் வாழ்ந்தார். மறைந்தபோதும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளார். அவரது வாழ்க்கை பத்திரிகை, அரசியல், மேடைபேச்சு, சினிமா, டி.வி. என்று அதனை சுற்றியே இருந்ததால் மக்கள் அவரை ஒருபோதும் மறக்கவில்லை. கைரிக்ஷாவை ஒழித்தார். பஸ்களை அரசுடைமை ஆக்கினார். ஒவ்வொரு கிராமத்துக்கும் மின்சாரம் கிடைக்க பாடுபட்டார். அனைத்து பகுதிகளுக்கும் சாலை அமைக்கவும், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கவும் பாடுபட்டார். கலைத்துறையிலும், பொதுவாழ்விலும், அரசியல் வாழ்விலும், தமிழுக்கு அவர் ஆற்றிய சேவைகள் என்றும் மக்களின் மனதில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நகைச்சுவை நடிகர் மயில்சாமி பேசும்போது கூறியதாவது:–
கலைஞரை யாராலும் மறக்க முடியாது. 50 வருடம் கட்சி தலைவராகவும், 13 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 5 முறை முதல்–அமைச்சராகவும் இருந்தவர் கலைஞர். அற்புதமான குடும்பத்தலைவர். கலைஞரின் ஞாபசக்தியும், நகைச்சுவை, சொல்வன்மை ஆற்றலும் மிகவும் அபாரமானது. என் உயிரினும் மேலான உடன்பிறப்பே என்று அவர் தொடங்கும் பேச்சு கட்சி தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும். அதனையே நானும் மிமிக்ரியாக மேடைகளில் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர், நடிகைகளுக்கு கருணாநிதியின் உருப்படங்களை கோவை சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. நா.கார்த்திக் நினைவு பரிசாக வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
தி.மு.க. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய மந்திரிகள் ஆ.ராசா, டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், தயாநிதி மாறன், முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, பொங்கலூர் பழனிசாமி, மு.பெ.சாமிநாதன், பொன்முடி, அமிர்தம், உதயநிதி ஸ்டாலின், எல்.கணேசன், அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க. பிரமுகர்கள், கட்சி பிரமுகர்கள், உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.