ராமேசுவரம், மதுரை உள்பட 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி இன்று கரைப்பு

மதுரை, ராமேசுவரம் உள்பட தமிழகத்தில் 6 இடங்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கரைக்கப் படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-08-25 23:00 GMT
மதுரை,

தமிழக பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியானது கடந்த 22-ந் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோரால் வழங்கப்பட்டது. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அஸ்தியை பெற்றுக்கொண்டார். தமிழக பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் அஸ்திக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் வாஜ்பாய் அஸ்தி இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் 6 இடங்களில் அதாவது புனித ஆறுகளிலும், கடலிலும் கரைக்கப்பட இருக்கிறது. இதன்படி மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் அஸ்தியானது சென்னை பெசன்ட்நகரில் அஷ்டலட்சுமி கோவில் அருகில் கடலில் கரைக்கப்படும்.

இதேபோல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரியில் முக்கடல்களும் சங்கமிக்கும் இடத்தில் அஸ்தி கரைக்கப்படும். முன்னாள் எம்.பி. இல.கணேசன் தலைமையில் திருச்சி ஸ்ரீரங்கம் முக்கூடலிலும், தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேசுவரம் கடலிலும் அஸ்தி கரைக்கப்படும்.

மத்திய கயிறு வாரியத்தின் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் வாஜ்பாய் அஸ்தியானது பவானி முக் கூடலில் கரைக்கப்படும். கே.என்.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.காந்தி தலைமையில் மதுரை வைகை ஆற்றில் கரைக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை வைகை ஆற்றில் கரைப்பதற்காக அஸ்தி வைக்கப்பட்டுள்ள ரதம் நேற்று மதுரை வந்தது. இதுகுறித்து பா.ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் சசிராமன் கூறியதாவது:-

மதுரையில் வாஜ்பாய் அஸ்தி, சிம்மக்கல் சாரதா பள்ளி எதிரே உள்ள வைகை ஆற்றில் நாளை (இன்று) பகல் 11 மணியளவில் கரைக்கப்படுகிறது. முன்னதாக இந்த அஸ்திக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணிக்கு பீ.பி.குளத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்திலும், 8 மணிக்கு செல்லூரிலும், 9 மணிக்கு தினமணி தியேட்டர் அருகிலும், 10 மணிக்கு ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரிலும், 10.30 மணிக்கு வடக்குமாசி-மேலமாசி வீதி சந்திப்பிலும் அஞ்சலி செலுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ராமேசுவரம் கடலில் கரைப்பதற்கான அஸ்தியுடன் கூடிய ரதம் நேற்று பரமக்குடி வந்தது. பின்னர் ராமநாதபுரத்தில் அரண்மனை பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் வாஜ்பாயின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தினார். பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநில துணை தலைவர் சுப.நாகராஜன், கோட்ட பொறுப்பாளர் சண்முகராஜா, மாவட்ட செயலாளர் ஆத்மாகார்த்திக், மாவட்ட துணை தலைவர் காந்தி, தேசிய பொதுக்குழு உறுப்பினர் வேதா சுப்பிரமணியன், நகர தலைவர் குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், புதிய தமிழகம் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கதிரேசன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இந்த ரதம் இன்று(ஞாயிற்றுக் கிழமை) காலை 7 மணிக்கு தங்கச்சிமடம் வழியாக ராமேசுவரம் பஸ் நிலையத்தை அடைகிறது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக அஸ்தி வைக்கப்படும். அதனை தொடர்ந்து பகல் 11 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி வேத மந்திரங்கள் முழங்க கரைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்