கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வதால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது திருநாவுக்கரசர் பேட்டி

கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வதால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாது என புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர் கூறினார்.

Update: 2018-08-25 23:00 GMT
புதுக்கோட்டை,

முன்னாள் முதல்–அமைச்சர் கருணாநிதியின், நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தி.மு.க. அழைப்பு விடுத்து உள்ளது. இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது அரசியல் நாகரீகம்.

இதனால் கூட்டணிக்குள் பிளவோ அல்லது புதிய அரசியல் கூட்டணியோ ஏற்படவோ வாய்ப்பு கிடையாது. அதேபோல் தான் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷாவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர் கலந்து கொண்டால் கருணாநிதியின் புகழை தான் பேசுவார். எனவே இதில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித வருத்தமும் ஏற்படாது. இதனால் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளன.


முல்லை பெரியாறு அணையை திறந்ததால் தான் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்பட்டதாக கேரள அரசு குற்றம் சாட்டி உள்ளது. இதற்கு தமிழக முதல்–அமைச்சர் தான் முறையான விளக்கம் மற்றும் பதில் அளிக்க வேண்டும். 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், கடைமடை பகுதி இதுவரை தண்ணீர் சென்று அடையாதற்கும், முக்கொம்பு, கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்ததற்கும், தமிழக அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளை முறையாக கண்காணித்து அணைகள் மற்றும் வாய்க்கால்களை பராமரிக்காததன் விளைவு தான்.

உடனடியாக தமிழக அரசு வல்லுனர் குழு ஒன்றை அமைத்து அணைகள் மற்றும் வாய்க்கால்களை பராமரிக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற 28–ந்தேதி மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு கட்சியில் இல்லாத மு.க.அழகிரியால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மு.க.அழகிரி என்ன முடிவெடுப்பார் என்பது எனக்கு தெரியாது. மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்