சென்னை தாம்பரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா

தாம்பரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர் பென்ஜமின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Update: 2018-08-25 22:15 GMT
தாம்பரம்,

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் பெரும் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்கும் வகையில் வருகிற 1–1–2019 முதல் மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் தட்டுக்கள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள் ஆகியவற்றை ஒழித்து விட்டு அவற்றுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத சாழை இலை, பாக்குமர இலை, பேப்பர் ரோல், துணி பைகள் பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள் உட்பட அனைத்து பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசு இல்லா மாவட்டமாக உருவாக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார தொடக்கவிழா தாம்பரத்தில் நேற்று நடந்தது.

விழாவுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். அமைச்சர் பென்ஜமின், ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. கே.என். ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பென்ஜமின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி வாசிக்க மாணவ–மாணவிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர். தமிழக அரசு அறிமுகப்படுத்திய பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ‘லோகோ’ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பயன்படுத்த வேண்டிய மாற்று பொருட்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது. இந்த கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பொன்னையா, அமைச்சர் பென்ஜமின், கே.என்.ராமச்சந்திரன் எம்.பி. ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும், பள்ளி மாணவ–மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விளக்குவதற்காக பேரணியாக சென்றனர்.

விழாவில் கலெக்டர் பொன்னையா கூறுகையில், ‘மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான உறுதி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும்’ என்றார்.

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகமது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், நகராட்சிகள் மண்டல இயக்குனர் இளங்கோவன், தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், சுகாதார ஆய்வாளர் ஆல்பட் அருள்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்