ஸ்டெர்லைட் ஆலையின் விதிமுறை மீறல்களை அறிய தமிழக அரசு ஆய்வு குழு அமைக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையின் விதிமுறை மீறல்களை அறிய தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கோரிக்கை வைத்து உள்ளார்.

Update: 2018-08-25 20:30 GMT

தூத்துக்குடி, 

ஸ்டெர்லைட் ஆலையின் விதிமுறை மீறல்களை அறிய தமிழக அரசு உடனடியாக ஒரு ஆய்வு குழுவை அமைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு கோரிக்கை வைத்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

விதிமுறை மீறல்கள்

தூத்துக்குடியில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் 1994–ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்ட போதே பல்வேறு விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. கடல் எல்லையில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் இதுபோன்ற ஆலைகள் இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆலை விதிமுறைகளை மீறி 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கடந்த 23.3.2013 அன்று இந்த ஆலையில் இருந்து கார்பன்டை ஆக்சைடு வெளியேறியதால் தூத்துக்குடி முழுவதும் மக்களுக்கு மூச்சு திணறல், மயக்கம், உடல் சோர்வு உள்ளிட்டவை ஏற்பட்டதால் அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதாவால் ஆலையை மூட உத்தரவிட்டதும், அதற்காக ரூ.100 கோடி உச்சநீதிமன்றத்தால் ஆலைக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதும் மக்களுக்கு தெரிந்ததே.

ஆய்வுக்குழு

இத்தகைய முறைகேடுகள் விதிமுறை மீறல்கள் இழப்புகள் மக்கள் நல கேடுக்கள் குறித்து அறிய தமிழக அரசு உடனடியாக நீதிபதிகள் அரிபரந்தாமன், சந்துரு அல்லது கலெக்டர் சகாயம் தலைமையில் ஒரு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். அந்த குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு உள்ள நீதிபதி எஸ்.ஜே.வசிப்தார் குழுவில் தாக்கல் செய்யவும், ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து அகற்றவும் தமிழக முதல்–அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்