தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

Update: 2018-08-25 08:00 GMT
கோவில்பட்டி, 

தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவாரண உதவி

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உதவிடும் வகையில், தமிழக அரசு ரூ.10 கோடி நிவாரண உதவி வழங்கி உள்ளது. மேலும் மழை வெள்ள மீட்பு பணிகளில் உதவியதுடன், மருந்து மாத்திரைகள், நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. நமது அருகில் உள்ள மாநிலம் என்பதால், ஏராளமான தன்னார்வலர்கள், சமூக அமைப்பினரும் கேரள மாநிலத்துக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

கோவில்பட்டியில் இருந்து தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் லாரிகளில் நிவாரண பொருட்களை அனுப்பி உள்ளனர். இதனை மனதார பாராட்டுகிறன். கேரள மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்பை அதி தீவிர பேரிடராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் அந்த மாநிலத்துக்கு கூடுதல் நிதி உதவிகள் கிடைக்கும்.

புதிய உறுப்பினர் சேர்க்கை

கடந்த 1972-ம் ஆண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும்தான் போட்டி. மற்ற கட்சிகள் எல்லாம் உதிரி கட்சிகள். தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க.வில் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 1½ கோடியாக உயர்த்தி, தமிழகத்திலேயே மிகப்பெரிய இயக்கமாக மாற்றினார். 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. நிலைத்து நிற்கும். தற்போது அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை 1¼ கோடியை கடந்து விட்டது. தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்க்கை பணி தொய்வின்றி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.

அவருடன் அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், பஞ்சாயத்து செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்