ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தேவாலாவில் ஆக்கிரமிப்பில் இருந்த 49 ஏக்கர் வனநிலம் மீட்பு
ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் தேவாலாவில் ஆக்கிரமிப்பில் இருந்த 49 ஏக்கர் வனநிலம் மீட்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் தாலுகா தேவாலாவில் கைவசம் வைத்துள்ள நிலத்தை வனமாக அறிவித்ததை ரத்து செய்ய வேண்டும் என கூடலூரில் உள்ள ஒரு அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக நேற்று முன்தினம் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது வன நிலத்தை ஆக்கிரமித்து வணிக ரீதியாக சொகுசு விடுதிகள் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என வனத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் அதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் வனப்பகுதியில் நடக்கும் செயல்களை அனுமதிக்க முடியாது. எனவே வணிக நோக்கில் வனநிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சொகுசு விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் வருவாய், வனத்துறையினர் சீல் வைக்க வேண்டும். இதற்காக வருவாய், வனத்துறையினருக்கு நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டார். மேலும் கூடலூரில் உள்ள அமைப்பு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவது குறித்து வருவாய், வனத்துறையினர் நேற்று ஆலோசித்தனர். பின்னர் நில அளவை செய்யும் பணி நடைபெற்றது. முதற்கட்டமாக ஆக்கிரமிப்பில் இருந்த 49 ஏக்கர் வனநிலம் மீட்கப்பட்டது. கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், தேவாலா வனச்சரகர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷெரீப், நில அளவையர் நசீர், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேல் மற்றும் வருவாய், வனம், போலீசார் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
பின்னர் வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட வனம் ஆகும். எனவே அத்துமீறி நுழைபவர்கள் மீது தமிழ்நாடு வனச்சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, சொகுசு விடுதிகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.